வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி
இது தென்னிந்தியாவுக்கே உரிய பாரம்பரிய இசை தானே?
எங்கே சுட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், மேஜையில் தாழ்வான பகுதியில் சுழன்று கொண்டிருந்த ஒலி நாடாவில் இருந்து வரும் இசையைக் குத்துமதிப்பாக அவதானித்துக் கேட்டான் அவன். அது கேட்க நன்றாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பிடிவாதத்தோடு சில வார்த்தைகளையும் சொற்கட்டுகளையும் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் அடம் தெரிந்தது. வார்த்தைகள் நிறுத்தாமல் வாதாடுவதை அட்சரம் பிசகாமல், இழுத்துக் கட்டிய தந்திகளின் மேல் சன்னமான அம்பு படர்ந்து சப்தித்துப் போலி செய்து, மேற்கத்திய இசைக் கருவியான வயலின், பாடும் குரலைத் தொடர்ந்து கொண்டிருந்தது. குரல் மேலோங்கிப் போனாலும் ஒரு வினாடி அதை அபிநயித்து விட்டுத் தாழும் வயலின் ஐரோப்பியக் கலாச்சாரத் தன்மையை முழுக்க இழந்து, புருஷனுக்கு சதா கீழ்ப்படிதலுள்ள இந்திய மனைவி போல பதவிசாகக் கூடவே வந்தது வைத்தாஸுக்குப் புதுமையாக இருந்தது. மேலும், ஓங்கி ஒலிக்க வேண்டிய முரசு அதிராது, எல்லா நேரத்திலும் பாடும் குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதும், ஒடுங்கி ஒலிப்பதும் விசித்திரமாக இருந்தது அவனுக்கு. ஒற்றை முரசு தொம்மெனப் புடைத்துத் தொடங்கி வைக்க, கூட்டமாக மற்ற முரசுகள் ஒலிக்க, முரசுகளின் தொகுதி நீட்டி முழங்கி அதிர, அதற்கு இசைந்து குழுவாகச் சத்தம் உயர்த்தி வாய் விட்டுப் பாடும் பாட்டும், கூடவே, அனைவரும் ஒற்றுமையாகக் கலந்து எல்லா இறுக்கமும் உதிர்த்து கால் வீசிக் குதித்தாடும் ஆடும் ஆட்டமும் நிகழும் கலாச்சாரச் சூழலில் இருந்து வந்தவனுக்கு இந்த இசையில் இனிமை புலப்பட்டாலும் அதன் சமூகக் கட்டுமானம் புரியவில்லை.
உங்கள் நாட்டு இசை கொஞ்சம் பலமாக ஒலிக்கும் இல்லையோ?
அமைச்சர் கேட்டார். அவருக்கு நாடு வாரியாக கலையையும் கலாச்சாரத்தையும் ரசிக்கத் தேர்ச்சி இருக்கும் என்று வைத்தாஸ் நம்பவில்லை. ஆனாலும் இந்திய அரசுத் துறை அதிகாரிகள் இருக்கிறார்களே. அபூர்வப் பிறவிகள். அவர்கள் மனது வைத்தால், முழு மூடர்களான நிர்வாகிகளுக்கு ஒரு ராத்திரியில் சிக்கலான ட்ரிக்னாமெட்ரி கணிதமோ, லத்தீன் இலக்கணமோ, எகிப்திய வாத்திய இசையோ கற்பித்து அறிவு செறிந்தவர்களாக ஆக்க முடியும் என்று வைத்தாஸ் படித்திருக்கிறான். அதுவும் தென்னிந்திய அதிகாரிக்கு அவருடைய மொழி பேசும் அதிகாரி செய்யக் கூடிய ஊழியம் இன்னும் கூடுதலாகும் போல்
அது எப்படியோ, அமைச்சரின் இந்தக் கேள்விக்குத் தான் வைத்தாஸ் காத்திருந்தான். அமைச்சரை வைத்தாஸின் நாட்டுக்கு நல்லெண்ண வருகையாக ஒரு வாரம் எழுந்தருள அழைப்பதற்கான தருணம் இது.
உடனே செயல்பட்டான் வைத்தாஸ்.
உங்கள் வருகையால் எங்களுக்கு மிகப் பெரிய பெருமை சேர்வதோடு, வல்லரசுகளின் மதிப்பீட்டில் எம்மைப் பற்றிய கணிப்பு மேன்மையுறும்.
புன்னகையோடு நல்ல ஆங்கிலத்தில் இதமாகக் கூட்டிச் சேர்த்தான் அவன்.
தழையத் தழைய பருத்தித் துணி உடுத்து, சாம்பல் பூசி, சந்தன மணம் கமழ வைத்தாஸின் நாட்டில் இவர் வந்து இறங்கியதும் உலகமே அதை ஆச்சரியத்தோடு கவனிக்கும் என்று நம்ப வைப்பதே தனக்கான பணி என்று தீவிரமாக மிகைப்படுத்திய விழைவுகளைச் சரம் சரமாக வைத்தாஸ் அடுக்க, உள்ளம் குளிர்ந்த அமைச்சரும், அதிகாரியும் கருணை செய்யும் முகமொழியும் உடல் மொழியுமாக அவனைப் பார்வையால் ஆதரித்தார்கள்.
உங்க நாட்டில் இந்தியக் கலாசார விழா நடத்தலாமே?
யோசனை தெரிவித்தார் அமைச்சர்.
திரைப் படங்களைத் திரையிடுவதோடு, அவற்றில் நடித்த நடிகைகளையும், விமானத்தில் இடம் இருக்கும் பட்சத்தில் நடிகர்கள் ஒன்றிரண்டு பேரையும் தன்னோடு வைத்தாஸின் நாட்டுக்குக் கூட்டிப் போவதில் சிரத்தை காட்டினார் அவர். அவருக்கு முன்னால் இருந்த அமைச்சர் வைத்தாஸின் நாட்டு சினிமா நடிகைகளைக் காணாமலே காமுற்றதை விட இது உசிதமானதென வைத்தாஸ் நினைத்தான்.
நிச்சயம் நடத்தலாம். மேலும் இந்த மாதிரியான பாடகர்களையும் அவர்களுடைய குழுக்களோடு எங்கள் நாட்டுக்கு வருகை புரிய வைக்கலாம்